சபர்ணாவின் சோக முடிவுக்கு காரணம் என்ன? போலீஸார் விசாரணையில் திடுக் தகவல்

admin

Editorial Team

தொலைக்காட்சி சீரியல் நடிகை சபர்ணாவின் மரணம் சின்னத்திரை கலைஞர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சபர்ணா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து கொண்டு வருகின்றனர். தற்போது சபர்ணாவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின் அறிக்கை வெளிவந்த பின்னரே இதுகுறித்த சந்தேகத்திற்கு முடிவு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சபர்ணா தங்கியிருந்த வீட்டை போலீஸார் சோதனை செய்ததில் டைரி ஒன்று கிடைத்துள்ளதாகவும், அந்த டைரியில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சபர்ணாவின் செல்போன் கடந்த 3 நாட்களாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே, 3 நாட்கள் முன்பு அவர் யாரிடம் பேசினார், அவருக்கு யார் யாரிடம் இருந்து அழைப்புகள் வந்துள்ளது என போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். சென்னையில் சபர்ணாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பதாகவும் அவரிடம்தான் சபர்ணா கடைசியாக பேசியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.  

மேலும் போலீசார் சபர்ணாவின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது உடல் படுக்கையில் அலங்கோலமாக அழுகிய நிலையில் இருந்துள்ளது. அவரது படுக்கைக்கு அருகே நான்கைந்து டீ கப்புகளும் இருந்துள்ளது. இதுகுறித்து அருகில் உள்ள டீக்கடைக்காரரிடம் விசாரித்தபோது அவர் வழக்கமாக தினமும் டீ வாங்கி செல்வார் என்று கூறியிருந்தார். 

மேலும் சபர்ணா இருக்கும் தெருவில் உள்ளவர்களிடமும் அவருடைய அபார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சபர்ணாவுக்கு நெருக்கமாக உள்ள சின்னத்திரை கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற முதல்கட்ட விசாரணையில் சமீபகாலமாக சபர்ணாவுக்கு தமிழ் சினிமாவிலும் சீரியல்களிலும் வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும், இதனால் இந்தி சினிமாவில் அவர் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தாராம். இதற்காக டெல்லிக்கு சென்றபோது அங்கு நவீன் என்ற சினிமா பிரமுகருடன் முதலில் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த காதல் சபர்ணாவின் பெற்றோர்களுக்கு பிடிக்காததால் பெற்றோரிடம் இருந்து பிரிந்து சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன்  நகர், 1வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சபர்ணா தனியாக குடியிருந்து வந்துள்ளார்.

ஆனால் குறுகிய காலத்திலேயே அந்த காதல் தோல்வியடைந்ததாகவும் இதனால் கடந்த சிலநாட்களாகவே அவர் மன உளைச்சலுடனும், தனிமையின் கொடுமையை அனுபவித்தும் இருந்துள்ளார். இந்த தனிமை மற்றும் மன உளைச்சல்களை அவர் தனது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் மறைமுகமாக சுட்டுக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்