குழந்தைகளை வளர்க்கும்போது கவனிக்கவேண்டியவை - அனைத்து பெற்றோருக்கும்..

admin

Editorial Team

அன்பும் பண்பும் பாசமும் நேசமும் நிறைந்த பெற்றோர்களே...

 

அழகழகாக குழந்தைகளைப் பெற்றால் மட்டும் போதாது, அவர்களை வளர்ப்பதில் மிகமிக அக்கறை கொள்ளல் வேண்டும்.

 

எல்லாக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகள் தான். அவர்கள் நல்லவராவது கெட்டவராவது பெற்றோர் வளர்ப்பினிலே ...... என்பதை ஒருபோதும் மறவாதீர்கள்

 

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது - குழந்தைகளிடம் அவர்களின் குறைகளை அன்பாக அரவணைப்போடு நிதானமாக சொல்லுங்கள். அதையும் அடிக்கடி சொல்லாதீர்கள்.

 

*அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது - குழந்தைகளை அவர்களின் சுதந்திரத்துக்கு விடுங்கள். குழந்தை விழுந்துவிடும் என்பதற்காக நடக்க விடாமல் இருக்க முடியாது தானே. அதே போன்று சுதந்திரமாக விடுங்கள். விழுந்தாலும் எழுந்து நடப்பது போல மீண்டும் உங்களிடம் வருவார்கள்.

*கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது - ஏனையோர் முன்னிலையிலே.... இல்லை குழந்தைகளின் நண்பர்கள் முன்னிலையிலோ கேலி செய்யாதீர்கள். அது அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடும் என்பதை மறவாதீர்கள்.

*அவமானப்படுத்தப்படும் குழந்தை குற்றவாளி ஆகிறது.  - ஒரு விசயத்தில் குழந்தை அவமானப்படுமிடத்தில் அவ் விசயம் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை அன்பாக சொல்லிக்கொடுத்து உணர வையுங்கள். மீண்டும் அவமானப்படும் வாய்ப்பை குறைத்து கொள்ளுங்கள்.

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. - அவர்கள் செய்யும் சின்ன சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்கள். குழந்தைகள் மீண்டும் அதை செய்ய ஆசைப்படுவார்களே அன்றி வெறுக்க மாட்டார்கள்.  

 

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது. - பெற்றோரிடத்தில் எப்படியெல்லாம் பழகவேண்டும் என சொல்லிக்கொடுத்து அவர்களை அவ்வப்போது புகழுங்கள். மற்றவர்களிடமும் அவ்வாறே மதித்து பழகுவார்கள் - ஏனெனில் புகழ்ச்சியை இலகுவில் விரும்புவதால் மதிப்பைப் பெறவேண்டும் என்பதற்காக மற்றவர்களிடமும் நன்றாக பழகுவார்கள்.
 

*நேர்மையை கண்டு வளரும் குழந்தை நியாயத்தை கற்றுக்கொள்கிறது - பெற்றோர்களின் வழிகாட்டலே குழந்தையின் வாழ்க்கைப்பாதை. தாயோ, இல்லை தந்தையோ செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் பார்த்து பார்த்தே உங்கள் குழந்தைகள் வளரப்போகின்றன. எனவே நேர்மையாக நடந்துகொண்டால் அவர்களும் நேர்மையாக இருப்பார்கள். 

 

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது -குழந்தையை வளர்க்கும்போது பெற்றோர் காட்டும் அதிகளவான அக்கறையே தான் வளர்ந்தபின் தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கையை வைக்கும் முதற்படியாகும். எனவே அக்கறை காட்டுங்கள் நம்பிக்கை தானாக வளரும்.

 

*நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது- குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்காதீர்கள். சுற்றத்தாரையும் உறவினர்களையும் காட்டி வளர்ப்பதோடு, அடிக்கடி வெளி உலகத்தையும் அவர்களுக்கு காட்டுங்கள். அப்போதுதான் வெளி நடப்புக்களையும் குழந்தை தெரிந்துகொள்ள உதவும். இல்லையேல் யாராவது ஒரு புது முகத்தைக் கண்டவுடன் குழந்தைகள் பயந்து ஓடி ஒழிவார்கள். அழுவார்கள். 
இன்னுமொரு புறம் பார்க்கையில் யார் எவர் என தெரியாமல் எல்லோரோடும் போயிடுவார்கள்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்