காய்கறி விற்று.. ரூ.3 லட்சம் கடன் வாங்கி.. தங்கவேலு தங்கம் வெல்ல உழைத்த தாய்

admin

Editorial Team

ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.21 வயதாகும், மாரியப்பன், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கம் வென்றுள்ளார். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி பதக்கத்தை பறித்துள்ளார் மாரியப்பன். இதே பிரிவில் இந்தியாவின், விகாஸ் சிங் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.மாரியப்பன் தங்கவேலுவிற்கு குடியரசு தலைவர், பிரதமர் என பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இந்த நிலையை அடைய அவர் பட்டபாடு பெரிது.

தகுதி பெற்றார் தங்கவேலு 1995, ஜூன் 28ம் தேதி பிறந்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவ்வாண்டு மார்ச் மாதம் துனிஷியாவில் நடந்த ஐபிஎல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 1.78 மீட்டரை தாண்டி குதித்து ரியோ பாராஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதியை தங்கவேலு பெற்றார்

குக்கிராமம் தமிழகத்தின் சேலம் நகரிலிருந்து 50 கிமீ தூரத்திலுள்ள குக்கிராமமான பெரியவடக்கம்பட்டியில் பிறந்து வளர்ந்து இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிப்பிடித்துள்ளார் தங்கவேலு.

பெங்களூரில் பயிற்சி பெங்களூவில், சத்யநாராயணா என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றவர் தங்கவேலு. 5 வயதாக இருந்தபோது, பள்ளிக்கு சென்ற வழியில், பஸ் மோதியதால், வலது கால் உடைந்துபோனது. அதன்பிறகு 5 வயதுக்கு உரிய காலாகவே அது மாறிப்போனது. குணமடையவும் இல்லை. வளரவும் இல்லை.

காய்கறி விற்ற தாய் தங்கவேலுவின் தாயார் காய்கறி விற்பனை செய்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். தங்கவேலுவின் மருத்துவ செலவுக்காக ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றிருந்தார் அவர். இன்னமும், அந்த 3 லட்சத்துக்கான, வட்டி, அசலை திருப்பி செலுத்தி வருகிறது தங்கவேலு குடும்பம்.

உயரம் தாண்ட ஊக்கம் பள்ளி காலத்தில் வாலிபாலில் தங்கவேலு ஆர்வம் காட்டினார். ஆனால், அவரிடம், உயரம் தாண்டுதலுக்கான திறமை ஒளிந்திருந்ததை கவனித்த பள்ளியின் உடல் கல்வி ஆசிரியர், உயரம் தாண்ட ஊக்கம் கொடுத்தார். அவர் கூறியது பலித்தது.

கண்ணில் தென்பட்ட ஸ்பார்க் பயிற்சியாளர் சத்தியநாராயணா கண்களில் தங்கவேலு கடந்த 2013ல் பட்டார். பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க வந்த தங்கவேலுவை பார்த்ததும், சத்தியநாராயணாவுக்கு ஏதோ ஒரு ஸ்பார்க். உடனே பெங்களூரில் வைத்து பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

சிறந்த கோச் விளையாட்டு என்பது தொழிலாக மாறிவிட்டாலும், தனது தாயாரின் கஷ்டத்தை போக்க நல்ல வேலை கிடைக்குமா என்று தேடி வந்தார். இப்போது பாரா ஒலிம்பிக்கில் சாதித்துள்ள நிலையில், சன்மானங்கள் அவரது குடும்ப வறுமையை போக்கும் என நம்பலாம். பேட்மின்டனுக்கு ஒரு கோபிச்சந்த் போல, உயரம் தாண்டுதலுக்கு, சத்தியநாராயணா மிகச்சிறந்த கோச்சாக உருவெடுத்து வருகிறார். 2012 லண்டன் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கிரிஷாவுக்கும் சத்தியநாராயணாதான் பயிற்சியாளர்.

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

YouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்